தமிழகம்

ராச்சாண்டார் திருமலை ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் காயமடைந்த மாடுபிடி வீரர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கரூர்: கரூர் மாவட்டம் ராச்சாண்டார் திருமலை ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில், சிகிச்சை பெற்று வந்த மாடுபிடி வீரர் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் தோகைமலை அருகே உள்ள ராச்சாண்டார் திருமலையில் நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 756 காளைகள், 367 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காளைகள் முட்டியதில் அவற்றின் உரிமையாளர்கள் 12 பேர், மாடுபிடிவீரர்கள் 22 பேர், பார்வையாளர்கள் 16 பேர் என மொத்தம் 50 பேர் காயமடைந்தனர்.

இதில், கரூர் மாவட்டம் காவல்காரன்பட்டி அருகேயுள்ள பள்ளபட்டியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் சிவக்குமார்(23) என்பவரின் கண்ணில் காளையின் கொம்பு குத்தியதில் பலத்த காயமடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து தோகைமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ரூ.3 லட்சம் நிதியுதவி: இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராச்சாண்டார் திருமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் சிவக்குமார் என்ற மாடுபிடி வீரர் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன், முதல்வரின் பொது நிவாரணநிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கஉத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்ற மாடுபிடி வீரர்களுக்கு விழாக்குழு சார்பாக தலா ரூ.1 லட்சம் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT