கரூர்: கரூர் மாவட்டம் ஆர்டிமலை ஜல்லிக்கட்டில் மாடு முட்டி பார்வையிழந்த இளைஞர் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (ஜன. 18) அதிகாலை உயிரிழந்தார். இது குறித்து தோகைமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் தோகைமலை அருகே உள்ள ராச்சாண்டார் திருமலையில் கிராம பொதுமக்கள் சார்பாக 61ம் ஆண்டு ஜல்லிகட்டு போட்டி நேற்று நடைபெற்றது. காலை 8.10 மணிக்கு தொடங்கி மாலை 4.50 மணிக்கு போட்டி நிறைவு பெற்றது.
இதில் 756 காளைகள் களம் இறக்கப்பட்டன. 367 மாடு பிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடங்கினர். போட்டியில், 21 காளைகளை அடக்கி முதலிடம் பெற்ற நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக்கிற்கு ஜல்லிக்கட்டு காளை மற்றும் வாசிங்மெஷின் பரிசாக வழங்கப்பட்டது.
7 காளைகளை அடக்கி 2ம் இடம் பெற்ற திருச்சியை சேர்ந்த ரஞ்சித்திற்கு சோபாசெட் பரிசாக வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டம் கீரிக்கல் மேட்டை சேர்ந்த செல்வத்தின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு சைக்கிள், பீரோ, ஜல்லிக்கட்டு தன்னாட்சி ஆய்வுக்குழு சார்பில் ரூ.10,000 பரிசாக வழங்கப்பட்டது.
போட்டியில், 12 மாடுகளின் உரிமையாளர்கள், 22 மாடு பிடி வீரர்கள், 16 பார்வையாளர்கள் என மொத்தம் 50 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனிடையே, போட்டியில் கலந்து கொண்ட கரூர் மாவட்டம் பள்ளபட்டியைச் சேர்ந்த மாடு பிடி வீரர் சிவக்குமார் (23) காளையை அடக்க முயன்றபோது, மாட்டின் கொம்பு குத்தியதில் கண் பகுதியில் காயமடைந்தார். இந்த நிலையில், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீரர் சிவக்குமார் சிகிச்சை பலனின்றி இன்று (ஜன. 18) அதிகாலை உயிரிழந்தார்.
இது குறித்து தோகைமலை காவல் நிலையத்தில் சிவக்குமாரின் தந்தை பழனிச்சாமி அளித்த புகாரின்பேரில் தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் விசாரணை நடத்தி வருகிறார். ஜல்லிகட்டு விழாவில் பங்கேற்ற மாடுபிடி வீரர்களுக்கு விழாக்குழு சார்பாக காப்பீடு செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.