சென்னை: அனைவரும் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது அவசியம் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார்.
பபாசியின் 46-வது சென்னை புத்தகக் காட்சி ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜன.6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழக சிறைத் துறைக்கு ஒரு அரங்கம் (எண் 286) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அரங்கத்தில், தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலை நூலகங்களுக்காக புத்தகங்கள் சேகரிக்கப்படுகின்றன. அதன்படி கண்காட்சிக்கு வரும் வாசகர்கள் பலர், தங்களுக்குப் பிடித்தமான நூல்களை சிறைவாசிகளுக்காக தானமாக வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி சென்னை புத்தகக் காட்சியைநேற்று பார்வையிட்டார். அப்போது சிறைத் துறையின் அரங்கத்தில் கைதிகளுக்காக 150 புத்தகங்களை தானமாக வழங்கினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியதாவது: புத்தக வாசிப்புதான் சிறந்த சமூகத்தை உருவாக்கும். எனவே, அனைவரும் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வது அவசியமானது. புத்தகங்களுக்கு என்றும் அழிவில்லை. தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பின்னர் நூல்கள் டிஜிட்டல் பரிணாமத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன.
தற்போது செல்போன், கணினி வழியாக புத்தகங்களைப் படிக்க முடிக்கிறது. எந்தப் புத்தகம் நன்றாக இருக்கிறது என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, நமக்கு கிடைக்கும் அனைத்து புத்தகங்களையும் படிக்க வேண்டும். அதில் உள்ளகருத்துகளை தெரிந்து கொள்ள வேண்டும். அதுவும் ஒரு அனுபவமாக அமையும் என்றார்.