சென்னை: கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜன.21-ம்தேதி மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப் பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடியில் ஆரூரான் சர்க்கரை ஆலையும், கடலூர் மாவட்டம், சித்தூரில் இயங்கி வந்த ஆரூரான் சர்க்கரை ஆலையும், கடந்த 2019-ம் ஆண்டு முதல் செயல்படவில்லை. மேலும், கரும்பு விவசாயிகளுக்குத் தரவேண்டிய ரூ.112 கோடி கரும்பு பண பாக்கியைத் தராமல், தேசிய கடன் தீர்ப்பாயத்துக்கு ஆரூரான் சர்க்கரை ஆலை சென்றுவிட்டது.
தீர்ப்பாயத்தின் மூலம் ஆலையை வாங்கிய கால்ஸ் நிறுவனம், கரும்பு வெட்டிய நிலுவைத் தொகையை தராமல் ஆலையை இயக்குவதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டது. மேலும், விவசாயிகள் பெயரில் ரூ.200 கோடிக்கு மேல் வங்கிகளில் கடன் பெற்று ஆரூரான் ஆலை நிர்வாகம் எடுத்துக் கொண்டுள்ளது.
எனவே, விவசாயிகள் பெயரில் பெற்ற கடன் தொகையை, ஆலை நிர்வாகத்தின் பெயரில் மாற்ற வேண்டும். அதோடு, நிலுவைத் தொகையை வழங்க மாநில அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் 21-ம் தேதி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.