திருச்சி / புதுக்கோட்டை / கரூர்: திருச்சி, புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுகளில் 1,968 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் உட்பட 114 பேர் காயமடைந்தனர்.
திருச்சி மாவட்டம் வளநாடு அருகேயுள்ள ஆவாரங்காடு கிராமத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 670 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க 200 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். இதில், காளைகள் முட்டியதில் 11 மாடுபிடி வீரர்கள் உட்பட 39 பேருக்கு காயம் ஏற்பட்டது.
அவர்களில் 29 பேர் அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 10 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி, மணப்பாறை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். காளைகளை அடக்கிய வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்கள் ஆகியோருக்கு விழாக் குழுவினரால் பரிசுகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன்விடுதி பெருமாள் கோயில் திடலில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.செல்வி தலைமையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், 542 காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.
காளைகளை அடக்குவதற்கு 200 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். காளைகள் முட்டியதில் 25 பேர் காயமடைந்தனர். அதில், 7 பேர் ஆலங்குடி மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு, ரொக்கப் பரிசு வழங்கினார். கரூர் மாவட்டம் ராச்சாண்டார் திருமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ம.லியாகத் தொடங்கி வைத்தார். திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர், கரூர் எஸ்.பி ஏ.சுந்தரவதனம், குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பா தேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், 756 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அடக்க 367 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். காளைகள் முட்டியதில் 22 மாடுபிடி வீரர்கள் உட்பட 50 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் 21 காளைகளை பிடித்து முதலிடம் பெற்ற நாமக்கல் மாவட்டம் எருமப் பட்டியைச் சேர்ந்த கார்த்தி என்பவருக்கு வாஷிங் மிஷின், ஜல்லிக்கட்டு காளை ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.
7 காளைகளை அடக்கி 2-ம் இடம் பெற்ற திருச்சியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கு சோபா பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த காளைக்கான பரிசை திருச்சி மாவட்டம் கீரிக்கல்மேடு செல்வம் பெற்றார்.