சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திறந்தவெளி அரங்கில் நேற்று நடைபெற்ற ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று இலக்கியத் திருவிழாவில், நினைவு பரிசு வழங்கி விருந்தினர்கள் கவுரவிக்கப்பட்டனர். (இடமிருந்து) வர்த்தமானன் பதிப்பக உரிமையாளர்  வர்த்தமானன், எழுத்தாளர் அ.வெண்ணிலா, கனி திரு, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், கல்கியின் பேத்தி சீதா ரவி, சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் மு.ராஜேந்திரன், ஓவியர் மணியம் செல்வன், மூத்த பத்திரிகையாளர் காலச்சக்கரம் நரசிம்மா, பேராசிரியர் இளையராஜா கண்ணன். 
தமிழகம்

‘பொன்னியின் செல்வன்’ நூலுக்கு இன்றும் ஏராளமான வாசகர்கள்: சாகித்ய அகாடமி விருதுபெற்ற மு.ராஜேந்திரன் பெருமிதம்

செய்திப்பிரிவு

சென்னை: கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நூலுக்கு ஏராளமான வாசகர்கள் உள்ளனர். ஓர் எழுத்தாளருக்கு இவ்வளவு பெரிய ஆதரவு எங்கும் கிடைத்ததில்லை என்று சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மு.ராஜேந்திரன் தெரிவித்தார்.

46-வது புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் உள்ள திறந்தவெளி அரங்கில், இந்து தமிழ் திசை, வர்த்தமானன் பதிப்பகம், அகநி வெளியீடு ஆகியவை சார்பில், பொன்னியின் செல்வன் வரலாற்று இலக்கியத் திருவிழா நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு தலைமையேற்று பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசியதாவது:

தலைமுறைகள் கடந்து ஓர் வரலாற்றை எடுத்துச் செல்ல எழுத்து முக்கியமானது. அந்த எழுத்தை வரலாற்று புதினமாக எழுதி, வெற்றியடைந்தவர் கல்கி. கிடைத்த தகவல் மட்டுமின்றி, பயணம் மேற்கொண்டு தகவல்களை திரட்டினார். இதன் மூலமாக, பூகோள ரீதியாகவும் இயற்கை சார்ந்தும் எழுதியுள்ளார்.

3 தலைமுறையைக் கடந்து...

ஆனால், 3 தலைமுறையைக் கடந்து எழுத்து பயணிக்கிறது என்றால், சுவாரஸ்யமான மொழி நடையும், அதில் சொல்லப்பட்டு இருக்கும் கதைக் கருவும் முக்கியமானது.

இந்நூலை படிக்கும் வாசகர்கள்கதையோடு ஒன்றிப் போகும் தன்மை கல்கி எழுத்தில் குறிப்பிடத்தக்கது. எல்லா நேரத்திலும்வாசகரை ஈர்க்கும் மொழிநடைக்குசொந்தக்காரர் அமரர் கல்கி. இந்த விழாவுக்கான முயற்சி எடுத்த இந்து தமிழ் திசை, வர்த்தமானன் பதிப்பகம், அகநி வெளியீடுக்கு வாழ்த்துகள். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான மு.ராஜேந்திரன் பேசியதாவது:

பொன்னியின் செல்வன் நூல் எழுத கல்கிக்கு இந்த அளவுக்கு வரலாற்று செய்திகள் கிடைத்தது என்பது மிக அபூர்வம். இதற்கு அவர் பிறந்து வளர்ந்த இடம் ஒரு காரணமாக இருக்கலாம்.

உற்சாகம், ஊக்கத்தை தரும்

பொன்னியின் செல்வன் நூல் படிக்கும்போது, எனக்கு 15 வயது. எனக்கு எப்போது எல்லாம் வலுகுறைவாக இருக்குமோ அப்போது எல்லாம் இந்த நூலை படித்து என்னை வலுப்படுத்தி கொள்வேன். எனக்கு உற்சாகம், ஊக்கம் ஏற்படும். அதுதான் ஒரு எழுத்தாளரின் திறமை.

கல்கியின் பொன்னியின் செல்வன் படமாக வந்தாலும், வராவிட்டாலும் இதற்கு ஒரு பெரியவாசகர்கள் இன்றும் உள்ளனர். ஓர்எழுத்தாளருக்கு இவ்வளவு ஆதரவு வேறெங்கும் கிடைத்ததில்லை. தெய்வத்தன்மை பொருந்திய நபரால்தான் இதுபோல எழுத முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கல்கியின் பேத்தி சீதா ரவிபேசும்போது, ‘‘பல தலைமுறை யினர் பொன்னியின் செல்வன் நூலை வாசித்து உள்ளனர். பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் வந்தபிறகு, நூலுக்கான தேடலும், நூலை வாசிக்க வேண்டும் என்ற ஆவலும் அதிகரித்துள்ளது’’ என்றார்.

விழாவில், மூத்த பத்திரிகையாளர் காலச்சக்கரம் நரசிம்மா, ஓவியர் மணியம் செல்வன், பபாசி செயலாளர் நாதம் கீதம் எஸ்.கே.முருகன், எழுத்தாளர் அ.வெண்ணிலா, பேராசிரியர் இளையராஜா கண்ணன் ஆகியோர் பேசினர்.

முன்னதாக, ‘இந்து தமிழ் திசை’முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் வரவேற்றார். வர்த்தமானன் பதிப்பகம் வர்த்தமானன் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT