சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த ஜன. 14-ம் தேதி தொடங்கி இன்று (ஜன.17) வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையை ஒட்டி மாணவர், ஆசிரியர் பலர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், பள்ளிகளுக்கு நாளை (ஜன. 18) விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கேட்டபோது, “பள்ளிகளுக்கு ஜன.18-ம் தேதி விடுமுறை அளிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்றார்.
இதன்மூலம் பள்ளிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.