தமிழகம்

தமிழகத்துக்கு கடந்த ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணி 2 லட்சம் பேர் வருகை: அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்

செய்திப்பிரிவு

உதகை: தமிழகத்துக்கு கடந்தாண்டு 2 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், 11 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார். உதகையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழரின் பண்பாடு, கலாச்சாரத்தை கடைபிடிக்கும் வகையில் மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை தீவுத்திடலில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்காக கலைப் பண்பாட்டு திருவிழா நடத்தப்பட்டது. மேலும், பரதநாட்டியம், சிலம்பாட்டம், பறைசாற்றுதல், குச்சி பிடியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட அனைத்துகலைகளையும், நாட்டுப்புறக் கலைஞர்களையும் வளர்க்கும்நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபோன்ற கலைகளை வளர்ப்பதன் மூலம் தமிழ்மொழி வளரும்.

அனைத்து துறைகளையும் சிறந்த துறைகளாக கொண்டுவர முதல்வர், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்தியாவில் தமிழக சுற்றுலாத் துறை முதலிடத்தில் உள்ளது. கரோனா காலத்தில் 2019-2020-ம் ஆண்டில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது. தமிழகத்துக்கு 2021-ம் ஆண்டில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், 11 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வந்துள்ளனர். இது மிகப்பெரிய வளர்ச்சி. சுற்றுலா பயணிகளுக்காக தங்கும் வசதி, போக்குவரத்து வசதி, சூழல் சுற்றுலா, பள்ளி சுற்றுலா, பண்பாட்டு சுற்றுலா, மருத்துவ சுற்றுலா என பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகிறது என்றார்.

SCROLL FOR NEXT