சென்னை: உலக பொருளாதாரத்தில் 2030-ம்ஆண்டுக்குள் இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேறும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
‘துக்ளக்’ இதழின் 53-வது ஆண்டு நிறைவு விழா, சென்னை ஆழ்வார்பேட்டையில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசியதாவது:
இந்தியாவில் இருந்து 3.2 கோடி மக்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். அவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் மத்தியஅரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. உக்ரைன் மீதான போரில், அங்கு வசித்த இந்தியர்களை மீட்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை உலக நாடுகளுக்கே வழிகாட்டுதலாக அமைந்தது.
தற்போது, உலக அளவில் பொருளாதாரத்தில் இந்தியா 5-வது நாடாக இருக்கிறது. 2030-ம்ஆண்டுக்குள் இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேறும். பொருளாதாரத்தில் அந்த அளவுக்கு இந்தியாவின் தாக்கம் உயர்ந்துவருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்தவித சமரசத்துக்கும் மத்திய அரசு செல்லவில்லை. தீவிரவாதத்தை ஒருபோதும் இந்தியா அனுமதிக்காது. அதில் மிக உறுதியாக இருக்கிறோம்.
இந்தியாவின் வெளியுறவு கொள்கையை அனைத்து நாடுகளும் பெருமையுடன் பார்க்கின்றன. இந்தியாவின் வெற்றியோ, தோல்வியோ எதுவாக இருந்தாலும்அது உலக நாடுகளில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருகாலத்தில் பேரிடர் காலங்களில் உலக நாடுகளின் உதவியை இந்தியா எதிர்நோக்கியது.
ஆனால், கரோனா காலகட்டத்தில் உலக நாடுகளுக்கு தடுப்பூசியை உற்பத்தி செய்து வழங்கும் அளவுக்கு நாம் முன்னேறி இருக்கிறோம். வளரும் நாடுகளில் இந்தியா முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. உலக நாடுகளுடன் நட்புறவிலும் இந்தியா சிறந்து விளங்குகிறது. இதனாலேயே உலக நாடுகளுக்கு மிகவும்தேவையான நாடாக மாறியிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் திராவிடம், திராவிட மாடல் என்ற சக்கர வியூகத்தில் நுழைந்து இருக்கிறார். அது பாஜகவுக்கு சாதகமான விஷயம். திராவிட மாடல் என திரும்பத் திரும்ப பேசுவது திமுகவுக்கே பின்னடைவை ஏற்படுத்தும். ஆனால், திராவிட மாடலுக்கான சரியான அர்த்தத்தை அவர் கூறவில்லை. உதயநிதியை அமைச்சராக்கியதன் மூலம் திமுக முழுவதும் குடும்பகட்சியாகிவிட்டது. ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கிய கட்சி சரிவையே சந்திக்கும்.
சட்டப்பேரவையில் ஆளுநர் பேசுவதே உரையாகும். அதில்மாற்றம் கொண்டுவர வேண்டுமெனில் பேரவையில் விவாதித்து முடிவெடுத்த பின்னரே மாறுதல் செய்ய முடியும். ஆளுநர் உரையை ஏற்க மாட்டோம் என்று விவாதிப்பதற்கு முன்னரே தீர்மானம் கொண்டு வருவது ஏற்புடையதல்ல. ஆளுநர் உரைக்கு ஓர் அரசு ஒப்புதல் அளிக்காவிட்டால் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த காரணத்தால் பஞ்சாப், உத்தரபிரதேச மாநிலங்களில் ஆட்சியாளர்கள் ராஜினாமா செய்யும் நிகழ்வுகள் நடந்துள்ளன. ஆளுநருக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியததை எதிர்த்து நீதிமன்றத்தை அணுக முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
‘துக்ளக்’கில் அதன் நிறுவனர் சோ எழுதிய ‘நினைத்தேன் எழுதுகிறேன்’ கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வடிவமைக்கப் பட்டுள்ளது. அந்த நூலை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டார். இந்நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.