இளமாறன் 
தமிழகம்

தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

செய்திப்பிரிவு

சென்னை: நிரம்பி இருந்த தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த ஒரு வயதுகுழந்தை பரிதாபமாக உயரிழந்தது.

சென்னை விருகம்பாக்கம் ராஜேஸ்வரி காலனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் அருண்குமார். வியாபாரிகள் சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவருக்கு 6 வயதில் இரட்டை குழந்தைகள் உள்ளன. மேலும், ஒரு வயதில் இளமாறன் என்ற குழந்தையும் இருந்தது. கடந்த 14-ம் தேதி இரவு குழந்தை இளமாறன் வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்தான். குழந்தையின் தாய் தேவகி சமையல் வேலையில் இருந்தார்.

அப்போது, குழந்தை மெல்ல குளியலறைக்கு சென்று அங்கு தண்ணீர் நிரம்பி இருந்த வாளியில்விளையாடிக் கொண்டிருந்தது. நீண்ட நேரமாகியும் குழந்தையின் சத்தம் கேட்காததால் சந்தேகம் அடைந்த தேவகி, வீடு முழுவதும் தேடினார். குளியலறைக்கு சென்று பார்த்தபோது வாளியில் நிரம்பி இருந்த தண்ணீருக்குள் குழந்தை மயங்கிய நிலையில் கிடந்தது.

அதிர்ச்சி அடைந்த தேவகி, உடனடியாக குழந்தையை மீட்டு கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். குழந்தை இளமாறனின் முதலாவது பிறந்தநாளை விழா அண்மையில் கொண்டாடி உள்ளனர். இந்நிலையில், தண்ணீர் வாளிக்குள் விழுந்து குழந்தை உயிரிழந்தது, அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT