சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் மாட்டுப் பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதைத்தொடர்ந்து 2-வது நாளாக கால்நடைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நேற்று மாட்டுப் பொங்கல் கடைபிடிக்கப்பட்டது. கிராமங்களில் பிரசித்தி பெற்ற இந்நாளில் மஞ்சு விரட்டு என்கிற ஜல்லிக்கட்டு போட்டி வீரத்தின் அடையாளமாக விளையாடப்படுகிறது.
விவசாயிகள், தங்களின் உழவுத்தோழனான மாடுகளை ஜோடியாக அலங்கரித்து, அவற்றின் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, புதுக் கயிறுகள், புதுமணிகள், பூமாலைகளை அணிவித்து சிறப்பு செய்தனர். மேலும் அவற்றுக்கு கற்பூரம் காட்டி வணங்குவதுடன், வடை, கரும்பு, வைக்கோல், புற்கள் போன்றவற்றை உணவாக படையலிட்டு மரியாதை செலுத்தினர்.
அந்தவகையில் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, ஏராளமான மாடுகள் அலங்கரிக்கப்பட்டு, அவற்றுக்கு உணவுகள் வழங்கப்பட்டு, வெகு விமரிசையாகவும், உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டது.
மாடுகளுக்கு அலங்காரம்: அதேபோல் சூளை, வால்டாக்ஸ் சாலை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மடிப்பாக்கம், அரும்பாக்கம், நங்கநல்லூர், பட்டினம்பாக்கம், அயனாவரம் கோசாலை, சவுகார்ப்பேட்டை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் உள்ள மக்கள் அதிகாலை முதல் தங்களை மாடுகளை குளிப்பாட்டி, பலூன்களால் அலங்கரித்து மாட்டுப் பொங்கலை சிறப்பாக கொண்டாடினர்.
மேலும் மெரினா, பட்டினம்பாக்கம் ஆகிய கடற்கரை பகுதிகளை ஒட்டியிருப்பவர்கள் தங்களது மாடுகளை கடலில் குளிக்க வைத்து, வண்ணப்பொட்டுகளால் அலங்கரித்து வீட்டுக்கு அழைத்து சென்றதும் குறிப்பிடத்தக்கது. கிராமங்களில் மட்டுமே பெரிதும் கொண்டாப்படும் இவ்விழாவானது நகரில் உள்ள வீட்டுத் தொழுவங்களிலும், தெருக் களிலும் கொண்டாடப்படுவதை இளைஞர்கள் பார்த்து ரசித்தனர்.