புதுக்கோட்டை: ஆளுநர் பொங்கல் வாழ்த்து செய்தியில் ‘தமிழ்நாடு' என்று பயன்படுத்தியது மாநில அரசுக்கு கிடைத்த வெற்றி என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று தெரிவித்தார்.
திருவள்ளுவர் தினத்தையொட்டி நேற்று புதுக்கோட்டை புதுக்குளம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் எஸ்.ரகுபதி பின்னர், செய்தியாளர்களிடம் கூறியது: ஆளுநர் பொங்கல் வாழ்த்து செய்தியில் ‘தமிழ்நாடு' என்று பயன்படுத்தியது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி.
செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சிறுவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், ‘திருப்பூரைச் சேர்ந்த சுபஸ்ரீ சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த வழக்கை என்னிடம் கொடுத்தால் 7 நாளில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பேன்' என்று பாஜக அண்ணாமலை கூறியது குறித்து பதிலளித்த அவர், அண்ணாமலை என்ன செய்வார் என்று எங்களுக்குத் தெரியும். கர்நாடகாவில் அவர் பதிவு செய்த வழக்குகளை விசாரணை செய்யட்டும் என்றார்.
இதேபோன்று, தமுஎகச மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மருத்துவர்கள் எஸ்.ராமதாஸ், கே.எச்.சலீம், வாசகர் பேரவைச் செயலாளர் எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.