சேவல் சண்டை | கோப்புப் படம் 
தமிழகம்

ஈரோடு, திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த நிபந்தனைகளுடன் உயர் நீதிமன்றம் அனுமதி

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மற்றும் திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி ஈரோடு மாவட்டம், பெரிய வடமலைபாளையத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதிக்க கோரியும், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை ஒட்டி, திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதிகள் வேலுமணி, ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சேவல் சண்டையின் போது சூதாட்டம் நடத்தப்பட மாட்டாது, சேவல்கள் துன்புறுத்தப்பட மாட்டாது என உறுதி அளித்தால், சேவல் சண்டைக்கு அனுமதிக் கோரிய மனுக்கள் பரிசீலிக்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சேவல்களை துன்புறுத்தக் கூடாது, போட்டி நடைபெறும் இடத்தில் ஒரு கால்நடை மருத்துவர் இருக்க வேண்டும், சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது, சேவலுக்கு மது கொடுக்க கூடாது, காலில் கத்தி கட்டக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், குறிப்பிட்ட சமூகத்தை பெருமைப்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிபந்தனைகளை மீறினால் காவல் துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT