ஓசூர்: ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று நீர்வரத்து விநாடிக்கு 500 கனஅடியாக அதிகரித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 443 கனஅடியாக இருந்தது. நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 500 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் நீர்மட்டம் 40.51 அடியாக இருந்தது.
இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரில் அதிகளவில் ரசாயனம் கலந்துள்ளதால்நுரை பொங்க வெளியேறுகிறது. இதனால் ஆறு முழுவதும் நுரைபொங்க கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் பயிர்கள் மீது நுரை படர்ந்துள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறும்போது, தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்றனர்.