ஆதியோகி சிலை 
தமிழகம்

பெங்களூரு அருகே ஆதியோகி சிலை நாளை திறப்பு: குடியரசு துணைத் தலைவர், கர்நாடக முதல்வர் பங்கேற்பு

செய்திப்பிரிவு

கோவை: கோவை ஈஷா யோகா மையம் சார்பில், கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஆதியோகி சிலை நாளை திறக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக, ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி சிலையை போன்று, பெங்களூரு அருகே உள்ள சிக்கபல்லாபுரத்தில் 112 அடியில் ஆதியோகி சிலை வரும் 15-ம் தேதி திறக்கப்பட உள்ளது. மகர சங்கராந்தி தினமான 15-ம் தேதி (நாளை) ஈஷா நிறுவனர் சத்குரு முன்னிலையில், குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்று ஆதியோகி சிலையை திறந்து வைக்கிறார்.

கர்நாடக மாநில ஆளுநர் தவார் சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பல பலர் விழாவில் பங்கேற்கவுள்ளனர். திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, ஆதியோகி சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பரிமாறிய வரலாற்றை 3டி ஒளி, ஒலி காட்சியாக விவரிக்கும் கண்ணை கவரும் ‘ஆதியோகி திவ்ய தரிசனம்’ நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. மேலும், ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் மற்றும் சவுண்ட்ஸ் ஆப் ஈஷா குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

முன்னதாக, ஆதியோகி சிலைக்கு முன்பாக, சக்திவாய்ந்த யோகேஸ்வர லிங்கத்தை சத்குரு பிரதிஷ்டை செய்ய உள்ளார். இதற்கு முன்பு, கடந்த அக்டோபர் மாதம் அங்கு நாக பிரதிஷ்டை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மக்களின் ஆன்மிக வளர்ச்சிக்காக சிக்கபல்லாபுரத்தில் உருவாக்கப்பட்டுள்ள சத்குரு சந்நிதியில், ஆதியோகி மட்டுமின்றி, கோவை ஈஷா யோகா மையத்தில் இருப்பதை போன்று லிங்க பைரவி, இரண்டு தீர்த்த குண்டங்கள், ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளி, ஈஷா ஹோம் ஸ்கூல், ஈஷா லீடர்ஷிப் அகாடமி ஆகிய கட்டமைப்புகளும் படிப்படியாக உருவாக்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT