கூட்டத்தில் பேசிய திருமாவளவன் 
தமிழகம்

ஆளுநர் இல்லாமல் பேரவைக் கூட்டம் நடத்த வேண்டும்: விசிக முற்றுகைப் போராட்டத்தில் திருமாவளவன் பேச்சு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ஆளுநர் இல்லாமலேயே சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் திருமாவளவன் பேசினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் இன்று (ஜன.13) நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், "ஆளுநருக்கு எதிரான எதிர்ப்பைக் காட்ட வேண்டிய தேவை இருக்கிறது. ஆளுநர் சட்டப்பேரவையில் நடந்து கொள்வது மட்டும் பிரச்சினை இல்லை. தமிழ்நாட்டிற்கு வந்ததிலிருந்தே பிரச்சினை தான். பொது நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக சனாதனத்தை மட்டுமே பேசுகிறார்.

தமிழ்நாடு என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அழைக்கப்பட்டும் வருகிறது. அண்ணாவிற்கு முன்பாகவே பெருந்தலைவர் காமராஜர் முன்னெடுத்தது, அண்ணா ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டது. இது திமுகவிற்கு எதிரானது அல்ல. நாம் எல்லாம் போற்றக் கூடிய சமூக நீதிக்கு எதிரானது.

ஆளுநராக நியமிக்கப்படுவர் ஓர் அரசியல் கட்சி சார்ந்து செயல்படக் கூடாது. ஆனால், முழுமையாக அரசியல்வாதியாக செயல்படுகிறார் ஆர்.என்.ரவி. சனாதனத்தை நிலைநாட்டுவதே ஆர்.எஸ்.எஸ் கொள்கை.

பிஜேபி அல்லாத மாநிலத்தில் பிஜேபிக்கு ஆதரவாக இருக்கக்கூடிய ஆட்களை ஆளுநராக நியமிக்க கூடாது. தமிழ்நாட்டை பிஜேபி குறிவைத்து விட்டார்கள். ஆனால், ஒரு முறை கூட அவர்களால் 10 சட்ட மன்ற உறுப்பினர்களைக் கூட அனுப்ப முடியவில்லை.

ஆளுநர் இல்லாமல் பேரவை கூட்டம் கேரளா, மேற்கு வங்காளத்தில் நடத்துகின்றனர். தமிழகத்திலும் நடத்த வேண்டும். தமிழகத்தை மத்திய பாஜக குறிவைத்து செயல்படுகிறது. தொடர்ந்து மாவட்டம் வாரியாக ஆளுநர் செயல்பாடுகளுக்கு எதிரான போராட்டம் நடக்கும்" என்று அவர் பேசினார்.

SCROLL FOR NEXT