சென்னை: 10 ஆண்டுகளாக தேங்கிக் கிடந்த தமிழ்நாட்டை முன்னோக்கி ஓடவிட்டிருக்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜன.9 ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதில் அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக முழுமையாக படிக்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தார். மேலும் இது தொடர்பான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் 2 நாட்களாக நடைபெற்றது. இந்நிலையில் இன்று (ஜன.13) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்குப் பதிலுரை அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.
அதில் அவர் பேசுகையில்,"நாள்தோறும் உழைக்கிறேன் என்பார்கள், நான் நொடிக்கு நொடி உழைத்து வருகிறேன். கடந்த ஆண்டில் 9,000 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் மூலம் ஒரு கோடி பேருக்கு மேல் பயனடைந்து இருக்கிறார்கள். மக்களின் நலன் மட்டுமே நமது சிந்தனையில் நின்றது, அதுவே மக்கள் மனதை வென்றது. தமிழ்நாட்டில் ரூ.2,57,850 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. 10 ஆண்டுகளாக தேங்கிக் கிடந்த தமிழ்நாட்டை முன்னோக்கி ஓடவிட்டிருக்கிறேன்." என்றார்.