சென்னை: சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில், பாஸ்போர்ட் தொடர்பான குறைகளுக்கு விரைவாக தீர்வு காண்பதற்கு வசதியாக ‘உங்கள் பாஸ்போர்ட் அதிகாரியை சந்திக்கவும்’ என்ற புதிய திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
இதன் மூலம், பாஸ்போர்ட் பெறுவதில் ஏற்படும் தாமதம், சிக்கல் உள்ளிட்ட குறைகளுக்கு பொதுமக்கள் சென்னை, அண்ணாசாலை, எண்.158, ராயலா டவர்ஸ் என்ற முகவரியில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி கோவேந்தன் மற்றும் உயர் அதிகாரிகளை வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நண்பகல் 12 முதல் மதியம் 1 மணி வரை எவ்வித முன்அனுமதியும் இன்றி நேரில் சென்று சந்தித்து, அவரிடம் தெரிவித்து நிவாரணம் பெறலாம்.
மேலும், இவ்வாறு நேரில் செல்வதற்கு முன்பாக, பொதுமக்கள் 73053 30666 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தங்களது குறைகளை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன் தெரிவித்துள்ளார்.