ஒட்டன்சத்திரம்: வரத்து குறைந்ததால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் முருங்கைக் காய் விலை அதிகரித்து 1 கிலோ ரூ.110 முதல் ரூ.130 வரை விற்பனையானது.
ஒட்டன்சத்திரம், சாலைப்புதூர், அத்திக்கோம்பை, இடையகோட்டை, மார்க்கம்ட்டி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் செடி முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டம், கேரளாவுக்கு அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தற்போது முருங்கைக்காய் சீசன் இல்லாததால் உள்ளூர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
இதே போன்று, வெளி மாநிலங்களில் இருந்தும் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு முருங்கை வரத்து குறைந்துவிட்டது. அதனால் கடந்த வாரம் கிலோ ரூ.80-க்கு விற்ற முருங்கைக்காய் நேற்று கிலோ ரூ.110 முதல் ரூ.130 வரை விலை அதிகரித்து விற்பனையானது. விலை அதிகரிப்பால் முருங்கை விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இது குறித்து ஒட்டன்சத்திரம் வியாபாரிகள் கூறுகையில், முருங்கை சீசன் இல்லாததால் வரத்து குறைந்துள்ளது. பொங்கல் பண்டிகயையொட்டி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறினர்.