தமிழகம்

ஆளுநரை எதிர்த்தால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்: எச்.ராஜா எச்சரிக்கை

செய்திப்பிரிவு

திருச்சி: தமிழகத்தில் தொடர்ந்து ஆளுநரை எதிர்த்தால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா எச்சரித்துள்ளார்.

பாஜகவின் திருச்சி மாநகர் மாவட்ட பாலக்கரை மண்டலம் சார்பில் நம்ம ஊர் மோடி பொங்கல் விழா நேற்று வி.எம்.பேட்டையில் நடைபெற்றது. விழாவுக்கு பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் உள்ள சில தீய சக்திகள் வேண்டுமென்றே ஆளுநர் குறித்தும், பாஜக குறித்தும் அவதூறு பரப்பி வருகின்றனர். சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் இடம் பெற்றிருந்ததால் தான், அவர் அவற்றை படிக்காமல் தவிர்த்துவிட்டார்.

இதற்காக ஆளுநரை சிலர் கண்டித்து வருகின்றனர். ஆனால் உண்மையை உணர்ந்து, இப்போது இருக்கும் நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொண்டதால், ஆளுநரை கண்டித்து யாரும்பேசக்கூடாது என அமைச்சர்களிடமும், எம்எல்ஏக்களிடமும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

எனவே, தொடர்ந்து ஆளுநரை எதிர்த்தால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார். விழாவில் பெண்கள் திரளானோர் கலந்து கொண்டு பொங்கலிட்டனர்.

SCROLL FOR NEXT