சென்னை: இம்மாதம் 17-ம் தேதி சென்னை வரும் சே குவேராவின் மகள் அலெய்டா குவேராவுக்கு விமான நிலையத்தில் மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன் விவரம்: கியூபப் புரட்சியாளரும், உலக இளைஞர்களின் ஆதர்ச நாயகராக திகழும் தோழர் சே குவேராவின் மகள் அலெய்டா குவேராவும், பேத்தி பேராசிரியர் டாக்டர் எஸ்டெஃபானி குவேராவும் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 2023 ஜனவரி 17 அன்று சென்னை வரும் அவர்களுக்கு விமான நிலையத்தில் மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் மற்றும் இடதுசாரி கட்சிகள் சார்பில் அளிக்கப்படுகிறது.
அதோடு, கியூப சோசலிசத்தின் மாண்புகளை பறைசாற்றவும், கியூப மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் 18.01.2023 அன்று சென்னையில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் சிபிஐ(எம்) கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், முன்னாள் கேரள அமைச்சருமான தோழர் எம்.ஏ.பேபி, கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி எம்.பி., சிபிஐ மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் கோபண்ணா, விசிக தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி., மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., சிபிஐ(எம்) மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் மற்றும் இடதுசாரி இயக்க தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.