சுனாமி.. இந்தப் பெயரை கேட்டாலே அலறு கின்றனர் மீனவ கிராம மக்கள்.
தங்கள் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட சுனாமியின் பாதிப்பில் இருந்து மீனவர்கள் கொஞ் சம் கொஞ்சமாக மீண்டு வந்தாலும் அவர்கள் மனதில் படிந்த வடு அப்படியேதான் உள்ளது.
இதுபற்றி கரிகாட்டு மீனவ குப்பத்தைச் சேர்ந்த மாரி (40) என்பவர் கூறும்போது, ‘‘சுனாமி அலை எனது பைபர் படகையும், மீன் பிடிக்க தேவையான வலை உள்ளிட்ட பொருட்களையும் அப்படியே கடலுக்குள் கொண்டு சென்றுவிட்டது. தற்போதுவரை புதிய பைபர் படகு வாங்க முடியவில்லை. கூலி வேலைக்குத்தான் சென்று வருகிறேன்’’ என கண்ணீர் மல்க கூறினார்.
ஈஞ்சம்பாக்கம் மீனவ குப்பத்தைச் சேர்ந்த ஏ.மோகன் (36) கூறும்போது, ‘‘சுனாமியால் மீனவர்க ளின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துவிட்டது. அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறோம். ஆனால், சுனாமி அலை ஏற்படுத்திய வடு மட்டும் மனதில் அப்படியே உள்ளது. கடல் அலை கொஞ்சம் வேகமாக இருந்தாலே பயம் வந்து விடுகிறது’’ என்றார்.
திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களும் சுனாமி என்ற பெயரைக் கேட்டாலே அலறுகின்றனர். சுனாமியால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும், சுனாமி வந்தால் என்ன செய்ய வேண்டும் என்றும் தங்கள் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.