இன்றைக்கு ஜெயலலிதாவின் இழப்பு என்பது எவராலும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று திருமாவளவன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஜெயலலிதா மறைவு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறும்போது, "ஜெயலலிதாவின் மறைவு அதிமுகவின் தொண்டர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களே துயரத்தில் ஆழ்ந்துவிடக் கூடிய நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும் அவர் நீண்டக் காலம் வாழ்ந்திருக்க வேண்டும்.
தமிழக மக்களுக்கு இன்னும் ஏராளமான பணிகளை ஆற்றிருக்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய எதிர்பார்ப்பும். முதல்வர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி, வெற்றிக்கரமாக நடத்திக் காட்டியவர். இன்றைக்கு அவருடைய இழப்பு என்பது எவராலும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
தமிழக அரசியல் களத்தில் மட்டுமல்ல, இந்தியளவிலான அரசியல் களத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை நிலைநிறுத்திக் கொண்டவர், தனி முத்திரையை பதித்திருப்பவர். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கக் கூடிய வல்லமைப் பெற்றவராக தேசியளவிலே புகழ் பெற்று விளங்கியவர் முதல்வர் ஜெயலலிதா" என்று தெரிவித்துள்ளார் திருமாவளவன்.