‘வார்தா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக் குழுவினர் இன்று தமிழகம் வருகின்றனர். முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் அக்குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர்.
தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களை கடந்த 12-ம் தேதி வார்தா புயல் தாக்கியது. மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் வீசிய சூறைக் காற்றால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. 1 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. 15 ஆயி ரத்துக்கும் அதிகமான மின்கம் பங்கள் சாய்ந்தன. 24 பேர் உயிரி ழந்தனர். வேலூர், விழுப்புரம், கடலூர் போன்ற மாவட்டங்களிலும் சேதங்கள் ஏற்பட்டன.
சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் மின்சாரம் துண் டிக்கப்பட்டு தொலைத் தொடர்பு வசதிகள் இல்லாமல் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளா னார்கள். புறநகர் பகுதிகளில் 15 நாட்களுக்குப் பிறகே நிலைமை சீரானது. புயல் நிவாரணப் பணிகளுக்கு தமிழக அரசு கடந்த 14-ம் தேதி ரூ.500 கோடி நிதி ஒதுக்கியது. சேதமடைந்த மின் கம்பங்கள், மின் மாற்றிகள், துணை மின் நிலையங்களை சீரமைக்க தமிழ்நாடு மின் வாரியத்துக்கு மட்டும் ரூ.350 கோடியும், சென்னை மாநகராட்சிக்கு ரூ.75 கோடியும் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 19-ம் தேதி டெல்லி சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து புயல் பாதிப்புகள் குறித்து 141 பக்கங்கள் அடங்கிய மனுவை அளித்தார். புயல் பாதிப்புகளை சீர் செய்யவும் மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் ரூ.22,573 கோடி நிதி தேவை என பிரதமரிடம் முதல்வர் வலியு றுத்தினார். முதல்கட்டமாக தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து உடனடியாக தமிழகத்துக்கு ரூ.1,000 கோடி ஒதுக்க வேண்டும், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து சேதங்களை மதிப்பிட மத்தியக் குழுவை விரைந்து அனுப்ப வேண்டும், தேசிய பேரிடர் மீட்பு நிதியம் மற்றும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் இருந்து நிதி வழங்க வேண்டும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
9 பேர் குழு வருகை
அதைத் தொடர்ந்து மத்திய உள்துறை இணைச் செயலாளர் பிரவீன் வசிஷ்டா தலைமையில் புகையிலை துறை இயக்குநர் (பொறுப்பு) கே.மனோசரண் (கொல்கத்தா), நிதித் துறை துணை இயக்குநர் ஆர்.பி.கவுல் (டெல்லி), குடிநீர் மற்றும் துப்புரவு துறை துணைச் செயலாளர் கே.நாராயண் ரெட்டி (டெல்லி), சுகாதாரம், குடும்ப நலத் துறை மூத்த மண்டல இயக்குநர் ஆர்.ரோஷிணி ஆர்தர் (சென்னை), மின்சார ஆணையத்தின் துணை இயக்குநர் சுமீத் குமார் (மும்பை), சாலைப் போக்குவரத்து, நெடுஞ் சாலைத் துறை மண்டல அலுவலர் டி.எஸ்.அரவிந்த் (சென்னை), ஊரக வளர்ச்சித் துறை துணைச் செயலாளர் (திறன் வளர்ச்சி) எஸ்.பி. திவாரி (டெல்லி), நீர் ஆணையத்தின் காவிரி மற்றும் தென்னக நதிகள் அமைப்பின் இயக்குநர் ஆர்.அழகேசன் (கோவை) ஆகிய 9 அதிகாரிகள் கொண்ட மத்தியக் குழுவினர் இன்று சென்னை வருகின்றனர்.
இக்குழுவினர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதய குமார், மின்துறை அமைச்சர் பி.தங்கமணி உள்ளிட்ட அமைச் சர்களையும் தலை மைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உள்ளிட்ட அதிகாரிக ளையும் சந்தித்துப் பேசுவார்கள் எனக் கூறப்படுகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர் மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் செல்லும் ஆய்வுக் குழுவினர், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் சேத விவரங்களை கேட்டறிய உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்க ளையும் சந்திக்க இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசின் சார்பில் துறை வாரியாக சேத விவரங்கள் புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள், புள்ளி விவரங்களுடன் தயாரிக்கப் பட்டுள்ளதாகவும், அவை மத்திய குழுவினரிடம் அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
ஆய்வு முடிந்ததும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அதன் அடிப்படையில் தமிழகத்துக்கு மத்திய அரசு நிவாரண நிதி வழங்கும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரி விக்கின்றன. சென்னை வரும் மத்திய குழுவினரிடம் பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை மனுக்கள் அளிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.