தமிழகம்

மயானத்தில் கொட்டப்பட்ட குப்பையை உடனே அகற்ற பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: ஐயப்பன்தாங்கல் பகுதியில் உள்ள மயானத்தில் கொட்டப்பட்ட குப்பையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த ஐயப்பன்தாங்கல் பகுதியில் 200 டன் மருத்துவக் கழிவுகள் சாலையோரம் கொட்டப்பட்டதாக கடந்த வாரம் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதனடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு, அமர்வின் நீதித் துறைஉறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், உதவிப் பொறியாளர் ஆகியோர் நேரில் ஆஜராகினர். பின்னர் அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

ஐயப்பன்தாங்கல் பகுதியில் கொட்டப்பட்டது மருத்துவக் கழிவுகள் இல்லை. அது மாநகர திடக்கழிவுகள்தான். அதுவும் அங்குள்ள மயானத்தில் கொட்டப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் குன்றத்தூர் பேரூராட்சி ஆகியவை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக மயானத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்றி, வருங்காலத்தில் இங்கு குப்பை கொட்டாமல் இருக்க மயானத்தைச் சுற்றி, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மீதான அடுத்த விசாரணை பிப்.7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT