மதுரை: தாங்கள் வளர்க்கும் காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என திருநங்கைகள், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மதுரை மாவட்டத்தில் நடக்கும் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன் லைன் முன் பதிவு madurai.nic.in என்ற இணையதளம் மூலமாக தொடங்கி நடந்து வரு கிறது. இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக் கட்டுகளில் பங்கேற்கச் செய்ய திருநங்கைகள் 15-க்கும் மேற் பட்ட காளைகளை வளர்த்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு போட்டிகளில் அவர்களது காளைகள் பங்கேற்க இணையத்தில் பதிவு செய்தும், கடைசி நேரத்தில் 4 காளைகளுக்கு மட்டும் அனுமதி கிடைத்தது. அதனால், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுகளில் திருநங்கைகள் வளர்க்கும் தலா 3 காளைகளுக்கு அனுமதிக்கோரி, 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அவர்கள் கூறுகையில், தங்களது காளைகளை ஜல்லிக் கட்டுக்காக தயார்படுத்தி வரும் நிலையில், மதுரையில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாமல் போவது கவலை அளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் தங்கள் காளைகள் பங்கேற்க சிறப்பு அனுமதி வழங்க வேண் டும் என்றனர்.