மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில் களில் மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலும் ஒன்று. இது 1,500 ஆண்டுகளுக்கு முன்பு சோழர் களால் கட்டப்பட்டது. இந்தக் கோயிலில் கடந்த 2001-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தற்போது கோயிலைப் புனர மைத்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் படி, ரூ.1.41 கோடி செலவில் கோயில் புதுப்பிக்கப்பட்டது. பணிகள் முடிந்ததையடுத்து, கும் பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கோயிலில் 33 குண்டங்கள் கொண்ட யாகசாலை அமைக்கப்பட்டு, கடந்த 28-ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கின. 29-ம் தேதி தன பூஜை, நவகோள் வேள்வி பூஜை, கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. காலையில் ஆறு கால யாக பூஜை செய்யப்பட்டது. பின்னர் 7.30 மணிக்கு யாக சாலையில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு 8 மணிக்கு ராஜகோபுரம், மூலவர் விமானம், அர்த்தமேரு சக்கரம், உற்சவர், லட்சுமி, சரஸ்வதி பரிவார சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, கும்பாபிஷேகத்தை தரிசித்தனர். அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
பிற்பகல் 11 மணிக்கு பிறகு பக்தர்கள் கோயிலுக்குள் தரிசனத் துக்கு அனுமதிக்கப்பட்டனர். மாலை 3 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 7 மணிக்கு காமாட்சி அம்மன் விசேஷ அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
கும்பாபிஷேக விழாவில் அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி, கூடுதல் ஆணை யர் கவிதா, பெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனி, நடிகர் மயில்சாமி, கோயில் தர்மகர்த்தா மணலி ஆர்.சீனிவாசன், கோயில் துணை ஆணையர் இரா.வான்மதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவையொட்டி, அப்பகுதி யில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.