ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர்பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையில் நேற்று கலந்துரையாடினார். படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

“நிர்வாக ரீதியாக அழைக்கலாம்... சிறுமைப்படுத்தும் நோக்கில் ‘ஒன்றிய அரசு’ என்பது தவறு” - ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கான முதல்நிலை, முதன்மை தேர்வுகளில் வெற்றி பெற்று நேர்காணலுக்கு தயாராகி வருபவர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி ‘எண்ணித் துணிக’ என்ற தலைப்பில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்தது. இதில் ஆளுநர் பேசியதாவது:

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளில் சேர்வோருக்கு ஆளுமை அவசியம். உங்கள் எண்ணம், பார்வை எப்படி இருந்தாலும், அரசின் முடிவை அமல்படுத்துவது மட்டுமே குடிமைப் பணி அதிகாரியின் கடமையாக இருக்க வேண்டும். மத்திய அரசின் கொள்கைகளை ஒருபோதும் விமர்சிக்க கூடாது.

சில கொள்கைகளில் மத்திய அரசும், மாநில அரசும் வேறுபடும் பட்சத்தில், மத்திய அரசு சொல்வதையே கேட்க வேண்டும். ஏனென்றால், மத்திய அரசு மூலமாக, மத்திய அரசுக்காக இந்திய குடிமைப் பணி அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

தெளிவான சிந்தனையோடு, தீர்க்கமாக பதில் அளிக்க வேண்டும். “எதற்கெடுத்தாலும் போராட்டத்தில் ஈடுபடுவதா?” என்று கேள்வி கேட்டால், “போராட்டம் என்பது உரிமை. அது ஜனநாயக ரீதியில் இருக்க வேண்டும். உரிமையை போராடி பெறுவதில் தவறு இல்லை” என்று பதில் தர வேண்டும்.

“ஜல்லிக்கட்டு போட்டி தேவையா?” என்று கேட்பவர்களுக்கு, “மாடுகள் பாதிக்கப்படாத வகையிலும், பங்கேற்பவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையிலும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம்” என கூற வேண்டும்.

மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என தமிழக அரசு மட்டுமே அழைக்கிறது. நிர்வாக ரீதியாக ஒன்றிய அரசு என அழைப்பதில் தவறு இல்லை. அதே நேரம், சிறுமைப்படுத்தும் நோக்கத்தில் அவ்வாறு குறிப்பிடுவது தவறு. இங்கு அரசியலுக்காக மட்டுமே அவ்வாறு அழைக்கப்படுகிறது. இதனால் ஒரு பயனும் இல்லை.

தமிழ் மிகவும் பழமையான மொழி. தமிழ், ஆங்கிலம் தவிர கூடுதல் மொழிகளை கற்றுக் கொள்வது நமக்கு அனைத்து விதத்திலும் உதவியாக இருக்கும். நாடு முழுவதும் தொடர்பு கொள்ள இந்தி கற்று கொள்வதில் தவறு இல்லை. இவ்வாறு ஆளுநர் கூறினார்.

SCROLL FOR NEXT