சென்னை: ஆளுநர் மாளிகையின் பொங்கல் அழைப்பிதழில் அரசு சின்னம், மாநிலத்தின் பெயர் ஆகியவை மாற்றப்பட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பொது நிகழ்ச்சிகளில் ஆற்றிய உரைகளில் அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்து வந்தன. சமீபத்தில் தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று உச்சரிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் தனது முதல் உரையில் அவர் அரசால் தயாரித்தளிக்கப்பட்ட உரையில் இருந்தவற்றை தவிர்த்து விட்டு பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அவருக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் கருத்துகளை தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் இருந்து அனுப்பப்பட்டுள்ள பொங்கலுக்கான அழைப்பிதழ் அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் மாநிலத்தின் பெயரை குறிப்பிடும் வார்த்தை மற்றும் தமிழக அரசின் முத்திரைச் சின்னத்துக்கு பதில் இந்திய அரசின் அசோக சக்கரம் சின்னம் இடம்பெற்றிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்தாண்டு சித்திரை முதல் நாள் தேனீர் விருந்துக்கு வழங்கப்பட்ட அழைப்பிதழ் மற்றும் இந்த பொங்கல் விழா அழைப்பிதழையும் சுட்டிக்காட்டி பொது வெளியில் விமர்சனங்கள் செய்யப்பட்டு வருகின்றன.