கோவை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து, காந்திபுரத்தில் உள்ள பெரியார் சிலை முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைப்புச் செயலாளர் ஆறுச்சாமி தலைமை வகித்தார்.
ஆளுநரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆளுநரின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 20 பேரை காட்டூர் போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு திராவிடர் இயக்க தமிழர் பேரவை அமைப்பின் வடக்கு மாவட்ட செயலாளர் சிலம்பரசன் தலைமையில், ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 17 பேரை, ரேஸ்கோர்ஸ் போலீஸார் கைது செய்தனர்.
பாஜக-வினர் கைது: காந்திபுரத்தில் ஆளுநரின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற தபெதிகவினரை கண்டித்து, கோவை மாநகர் மாவட்ட பாஜகவினர், வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி தலைமை வகித்தார்.
ஆளுநரின் உருவபொம்மையை எரிக்க முயன்றவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரி முழக்கமிட்டனர். மறியலில் ஈடுபட்ட 44-க்கும் மேற்பட்டோரை காட்டூர் போலீஸார் கைது செய்தனர்.