ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினர், டிசம்பர் 5-ம் தேதி இதய செயலிழப்பு நிகழ்வதற்கு முன்பாக அவர் அதிசயமாக பிழைத்ததாகவே நம்பினார்கள். நீண்ட நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென உடல்நிலை நன்கு தேறிவந்ததால் திடீர் இதய செயலிழப்பு நிகழும் என்று எதிர்பார்க்கவில்லை. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணியளவில் திடீரென அவரது இதய துடிப்பு குறைந்தது. உடனடியாக மருத்துவர்கள் குழு அவரது அறைக்கு விரைந்தது. அப்போது ஈசிஜி சோதனையில் அவரது இதய துடிப்பு சீராக இல்லாமல் குறைந்துகொண்டே வந்தது. இவ்வாறு செல்வது இதய செயலிழப்புக்கான அறிகுறி ஆகும். இதைத் தொடர்ந்து அவருக்கு சுவாச இயக்க மீட்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அது எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை. இதையடுத்து எக்மோ எனப்படும் உயிரை காப்பதற்கான இறுதி சிகிச்சை செய்யப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை தீவிர சிகிச்சை ஆலோசகர் ஆர்.செந்தில்குமார் தெரிவித்தார். அந்த பரபரப்பான 3 மணி நேரத்தில் பல்வேறு மருத்துவ விஷயங்களை நாங்கள் அவசர அவசரமாக செய்ய வேண்டியிருந்தது. இதன் விளைவுகள் எப்படி இருக்குமோ என்று சிந்திக்க அப்போது எங்களுக்கு நேரம் இல்லை. முதல்வரின் உயிரை காக்க அதிகபட்சம் என்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்தோம் என்றார் மற்றொரு மருத்துவ ஆலோசகர் ரமேஷ் வெங்கட்ராமன்.
கூட்டத்தில் பேசிய அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி.ரெட்டி, “முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது ஆரம்பத்தில் சில நாட்கள் மிகவும் சிக்கலாகவே இருந்தன. மருத்துவக் குழுவில் இடம்பெற்றிருந்த ஒவ்வொருவரின் அறிவுரைகளால் அதிசயம் நிகழ்ந்து அவர் குணமடைந்தார். ஆனால், அதன்பிறகு திடீரென இதய செயலிழப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்தார். மிகவும் இக்கட்டான சூழலில் பிழைத்துக் கொண்டவரை எப்படி இழந்தோம் என்று தெரியவில்லை” என்றார்.
அப்போலோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரீதா ரெட்டி பேசும்போது, “விதியின் போக்கை மாற்ற நாமெல்லாம் ஒரு குழுவாக இணைந்து கடுமையாக போராடினோம். விதியை மாற்ற முடியும் என்று நினைத்தோம். ஆனால், அது நம் கையில் இல்லை” என்றார்.
வெளிநாட்டிலும் கிடைக்காத சிகிச்சை
முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக அப்போலோவில் நேற்றுமுன்தினம் சிறப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த கூட்டத்தில் பேசிய தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் பாபு கே. ஆபிரகாம், “முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எனக்கு முழு திருப்தி அளிக்கிறது. அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால்கூட இந்த அளவுக்கு சிகிச்சை சிகிச்சை சிறப்பாக அளிக்கப்பட்டிருக்க முடியாது என்று குறிப்பிட்டார். முதல்வரை சிகிச்சைக்காக லண்டன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டபோது, அவ்வாறு கொண்டு சென்றிருக்க முடியும். ஆனால், அங்கும் இதைவிட சிறப்பாக சிகிச்சை அளித்திருக்க முடியுமா என்று தெரியவில்லை என்று லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே கூறியதையும் டாக்டர் ஆபிரகாம் அந்த கூட்டத்தில் நினைவுகூர்ந்தார்.