ஈரோடு: மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், சிறப்பாக தொழில்களை நடத்தி, பெரிய தொழிலதிபர்களாக வளர்ந்து வருகின்றனர், என ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உன்னி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ், சக்தி பவானி மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உன்னி பேசியதாவது:
மாவட்டத்தில் 77 ஊராட்சிகளில் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நமது மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழில்கள் அதிக அளவில் உள்ளன. விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை மதிப்பு கூட்டும் பொருட்களாக மாற்றி, விற்பனை செய்யும் போது, தொழில் முனைவோராக மாற முடியும். இதற்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இதற்கென ஆரம்பிக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தற்போது சிறப்பாக தொழில்களை நடத்தி, பெரிய தொழிலதிபர்களாக வளர்ந்து வருகின்றனர். இதன் மூலம் சமுதாயத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும். இந்த ஆண்டு உலக சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட்டு வருவதால், சிறுதானியங்களைக் கொண்டு மதிப்புக்கூட்டுப் பொருட்களை அறிமுகப்படுத்துவது சிறப்பானதாகும், என்றார்.
நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு ரூ.13.35 லட்சம் இணை மானிய நிதி வழங்கிய ஆட்சியர், 20 பேருக்கு திறன் வளர்ப்பு பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார். ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களான நற்பவி செக்கு எண்ணெய், வனமகள் அரப்பு தூள், வாழைப்பழம் சிப்ஸ், ஆவாரம்பூ டீத்தூள்,ராகி மாவு உள்ளிட்ட 26 வகையான பொருட்களை சந்தைக்கு ஆட்சியர் அறிமுகம் செய்து வைத்தார்.