திருவள்ளூர்: சட்டப்பேரவை மரபுகளை மீறிய ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என கோரி திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, திருத்தணி உள்ளிட்ட இடங்களில் கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள், திமுகவினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தினர்.
தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல் கூட்டம் நேற்று முன்தினம், சட்டப்பேரவையில் தொடங்கியது. அந்த கூட்டத்தில், ஆளுநர் உரையில் இடம்பெற்ற சில வாசகங்களை, தனது உரையின்போது ஆளுநர் ஆர்.என். ரவி குறிப்பிடாமல் தவிர்த்தார்.
இதனை சுட்டிக் காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றியதால், சட்டப்பேரவையில்இருந்து ஆளுநர் வெளியேறினார். ஆளுநரின் இச்செயலுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சட்டப்பேரவை மரபுகளை மீறிய ஆளுநரை மத்திய அரசுதிரும்ப பெறவேண்டும் என கோரி, திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள், திமுகவினர் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தினர்.
இதில், திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே பட்டரைபெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் அரசுசட்டக் கல்லூரி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் தமிழக ஆளுநருக்கு எதிராக பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அவர்கள், ‘வாழ்க தமிழ்நாடு’ என முழக்கமிட்டனர்.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமிஅரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர், கல்லூரி வளாகத்தின் முன்பு, ‘வாழ்க தமிழ்நாடு’ என்ற வாசகத்துடன் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆவடியை அடுத்த பட்டாபிராம் டி.ஆர்.பி.சி.சி.சி. இந்துக் கல்லூரி வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், ‘வாழ்க தமிழ்நாடு, வாழ்க தமிழ்’போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி, தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக் கல்லூரி வாயிலில், திமுக மாணவரணி சார்பில்ஆளுநரை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாணவர்கள், ‘GET OUT RAVI’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி, ‘ஆளுநரே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு’ என முழக்கமிட்டனர்.
‘வாழ்க தமிழ்நாடு'
மேலும், திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, சென்னை மாநில கல்லூரி மாணவர்கள், ‘வாழ்க தமிழ்நாடு' என்ற வாசகம் அடங்கிய பதாகைகள் ஏந்திய வண்ணம், ஆளுநருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு, திருவள்ளூர் பகுதியில் திருவள்ளூர் ரயில் நிலையம் நோக்கி பேரணியாக சென்றனர்.
பொன்னேரி சார்பு நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர்கள் ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சட்டப்பேரவை மரபுகளை மீறிய ஆளுநரை மத்திய அரசுதிரும்ப பெறவேண்டும் என, வலியுறுத்தினர். அதுமட்டுமல்லாமல், வழக்கறிஞர்கள் சிலர், ஆளுநரின் புகைப்படத்தை மிதித்து, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
பொன்னேரி அண்ணா சிலை அருகேதிமுகவினர் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல், கும்மிடிப்பூண்டி, ஆரணி, மாதர்பாக்கம் பகுதிகளிலும் திமுகவினர் தமிழகஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கும்மிடிப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழக ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.