திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட திரையரங்குகளில் பொங்கலுக்கு நடிகர்கள் அஜித், விஜய் படங்கள் வெளியாவதை முன்னிட்டு பாலா பிஷேகம் செய்வது, பட்டாசு வெடிப்பது போன்ற செயல்களுக்கு மாவட்டக் காவல்துறை தடை விதித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி உள்ளிட்ட ஊர்களில் பொங்கலை முன்னிட்டு, நடிர்கள் அஜித் நடித்த துணிவு, நடிகர் விஜய் நடித்த வாரிசு ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இதற்காக கட் அவுட் வைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகளை, நடிகர்களின் ரசிகர்கள் படங்கள் வெளியாகும் தியேட்டர்கள் முன்பு செய்து வருகின்றனர்.
இதில் ஒரே காம்பளக்ஸில் ஒன்றுக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் உள்ள நிலையில், ஒரே வளாகத்தில் அஜித், விஜய் ரசிகர்கள் கூடும் நிலையில் பிரச்சினைகள் ஏற் பாடாமல் இருக்க பல்வேறு ஏற்பாடுகளை போலீஸாரும் செய்து வருகின்றனர். இதற்காக திண்டுக்கல் மாவட்ட காவல்துறைரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட எஸ்பி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் துணிவு, வாரிசு படங்கள் வெளியாவதால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு மாவட்ட காவல்துறை போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. திரையரங்குகளுக்கு முன்பு பாலாபிஷேகம், பூஜைகள் செய்வது மற்றும் பேனர்கள் வைப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள டிக்கெட் கட்டணம் மற்றும் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கான கட்டணங்களை அதிகப்படியாக வசூல் செய்வதாக புகார்|கள் வரும்பட்சத்தில் வருவாய்த்|துறையினருடன் போலீஸாரும் இணைந்து சம்பந்தப்பட்ட நபர்கள்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
திரையரங்குகளுக்கு முன்பு பட்டாசு வெடிப்பது, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பேனர்கள் வைப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட எஸ்பி வீ.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.