மதுரை: அலங்காநல்லூரில் 2021-ல்நடந்த ஜல்லிக்கட்டில் அதிக காளைகளைப் பிடித்த மாடுபிடி வீரருக்கு முதல் பரிசு வழங்கப்படாதது தொடர்பாக, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழுத் தலைவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை விராட்டிபத்தைச் சேர்ந்த கண்ணன், உயர் நீதி மன்றக் கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு: நான் அலங்காநல்லூரில் 2021-ம்ஆண்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளைப் பிடித்து முதல் பரிசு பெற்றேன். இப்போட்டியில் கருப்பணன் 2-ம் பரிசு பெற்றார்.
அவர் போட்டியில் பனியன்களை மாற்றி அணிந்து முறைகேடாக வெற்றிபெற்றதாகவும், இதனால் தனக்கு முதல் பரிசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் அதிகாரிகள் தாக்கல் செய்த பதில் மனுவில், வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் கண்ணன் பனியன்களை மாற்றியது உண்மைதான்.
இருப்பினும் அவர் கருப்பணனை காட்டிலும் அதிக காளைகளைப் பிடித்துள்ளார் எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து, விழாக்குழு அறிவித்தது போல் பரிசுகளை வழங்க வேண்டும் என அறிவித்து வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அறிவித்தவாறு எனக்கு முதல் பரிசு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் விழாக் குழுவிடம் மனு அளித்தேன். இருப்பினும் இதுவரை எனக்கு முதல் பரிசு வழங்கவில்லை.
இதனால், நீதிமன்ற உத் தரவை நிறைவேற்றாத மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், கோட்டாட்சியர் சுகிபிரேமிளா, வாடிப்பட்டி வட்டாட்சியர் நவநீதகிருஷ்ணன், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழுத் தலைவர் ஜெ.சுந்தர் ராஜன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக் குழுத் தலைவர் சுந்தர் ராஜனுக்கு ஜாமீனில் வெளி வரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து, விசாரணையை ஜன. 23-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.