நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஒலப்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் தேங்காய் நார் மில் வைத்து நடத்தி வருகிறார்.
இவரது நார் மில்லில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சாரம், அவருடைய மனைவி மனிஷாதேவி தம்பதியினர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் தீஷ்குமார் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மனிஷாதேவி தனது குழந்தை தீஷ்குமாரை மடியில் வைத்து கொண்டே தேங்காய் நார் மில்லில் மிஷினில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக தீஷ்குமார் ஓடிக்கொண்டிருக்கும் மிஷனின் பெல்ட்டை பிடித்துள்ளார். அப்போது திடீரென மிஷினுக்குள் குழந்தை இழுத்து செல்லப்பட்டது.
தாயின் கண்ணெதிரே மிஷினில் சிக்கிய குழந்தை தீஷ்குமார் மீட்கப்பட்டு உடனடியாக அருகில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது. குழந்தை தீஷ்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து பரமத்திவேலுார் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயின் கண்ணெதிரே குழந்தை மிஷினில் சிக்கி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.