சென்னை: "தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள், மத்திய அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுவது போல இருக்கிறது. எனவே, அவரைத் திரும்பப் பெற்றால்தான் மத்திய அரசுக்கு தமிழ்நாட்டில் நல்ல பெயர் கிடைக்கும்" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் சட்டமன்றத்தில் ஆளுநர் வெளியேறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "தமிழக சட்டமன்ற வரலாற்றில் நேற்றைய நிகழ்வு ஒரு கருப்பு தினமாகத்தான் பார்க்கப்படுகிறது. காரணம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக எந்த குடிமகன் செயல்பட்டாலும் அது தவறுதான். அது சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தாலும் சரி அது தவறுதான்.
தமிழக ஆளுநர் தேவையில்லாத பேச்சுகளை எல்லாம் பேசுகிறார். அவர் தமிழ்நாட்டில், அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் இருக்கலாம். தமிழ்நாடு என்ற பெயர் சரியில்லை, தமிழகம் என்று சொல்வது.
அவர் ஒரு படித்த ஐபிஎஸ் அதிகாரி. ரொம்ப சீனியராக இருந்தவர்கள்தான் மத்திய அரசு ஆளுநராக நியமிக்கும். ஆனால், அவர் மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுவது போல, அவருடைய செயல்பாடுகள் இருக்கிறது. எனவே மத்திய அரசாங்கம் அவரை திரும்பப் பெற்றால்தான் மத்திய அரசுக்கே தமிழ்நாட்டில் நல்ல பெயர் கிடைக்கும்" என்று அவர் கூறினார்.