தேனி சமதர்மபுரம் காமராஜர் பூங்கா அருகே அமைக்கப்பட்டுள்ள போகி பண்டிகைக்கான சிறப்பு சேகரிப்பு மையம். 
தமிழகம்

புகையில்லா போகி | தேனியில் பழைய பொருள் சேகரிப்பு மையங்கள் அமைப்பு: வீடுகளில் நேரடியாக பெறவும் ஏற்பாடு

என்.கணேஷ்ராஜ்

தேனி: புகையில்லா போகிப் பண்டிகையை வலியுறுத்தி தேனியில் பொதுமக்களிடம் இருந்து பழைய பொருட்களை சேகரிப்பதற்காக நகராட்சி சார்பில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூய்மைப் பணியாளர்கள் மூலம் வீடுதோறும் இவற்றை பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தேனி அல்லிநகராட்சியின் நகராட்சி எல்லை பெரியகுளம் சாலை பொம்மையகவுண்டன்பட்டியில் தொடங்கி மதுரை சாலை கருவேல்நாயக்கன்பட்டி வரை உள்ளது. இதில் உள்ள 33 வார்டுகள் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. தினமும் சுமார் 30டன் கழிவுகள் சேகரமாகின்றன. இந்நிலையில், வரும் 14-ம் தேதி போகிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மார்கழி மாதத்தின் கடைசிநாளில் கொண்டாடப்படும் இந்நாளில் பழைய பொருட்களையும், பயனற்றவையையும் கழிக்கும் ஐதீகம் உள்ளது.

இதை பாரம்பரியமாக கடைபிடிக்கும் பலரும் வீடுகளில் உள்ள பழைய மெத்தைகள், பயன்படுத்திய பொருட்கள் பலவற்றையும் எரிக்கின்றனர். சிலர் டயர், பிளாஸ்டிக் பொருள் உள்ளிட்டவைற்றையும் எரிப்பதால் சுற்றுப்புறத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற நிலையைத் தவிர்க்க போகி பண்டிகைக்காக நகராட்சி சார்பில் தேனியில் சிறப்பு சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கழிக்க விரும்பும் பழைய பொருட்களை இங்கு தரலாம். இதற்காக பொம்மையகவுண்டன்பட்டி, பழைய கம்போஸ்ட் ஓடை தெரு, சமதர்மபுரம், மேற்குசந்தை, புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து நகராட்சி தூய்மைப் பணி அதிகாரிகள் கூறுகையில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்த சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புகையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 14-ம் தேதி வரை இந்த மையம் செயல்படும். தினமும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மையங்களில் பழைய பொருட்களை கொடுக்கலாம். இதுதவிர தெருக்களில் அன்றாடம் குப்பைகளை சேகரிக்க வரும் தூய்மைப் பணியாளர்களிடமும் வழங்கலாம். அவர்கள் தனியே இவற்றை வைத்திருந்து சேகரிப்பு மையங்களில் வழங்குவர். இந்த ஆண்டு முதல்முறையாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் இதனை பயன்படுத்தி தேனியின் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT