சென்னை: "ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சட்டப்பேரவையிலே நடந்துகொண்ட அநாகரிகமான செயலைக் கண்டித்து தனிநபர் தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி கொடுத்திருக்கிறது. நாளை அந்த தனிநபர் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்" என்று காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஜன 10) மறைந்த எம்எல்ஏக்கள், மற்றும் பல்துறை பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சட்டமன்றத்துக்கு வெளியே வந்த காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சட்டப்பேரவையிலேயே நடந்துகொண்ட அநாகரிகமான செயலை கண்டித்து தனிநபர் தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி கொடுத்திருக்கிறது.
நாளை கூட்டத்தொடரின்போது, அந்த தனிநபர் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். இந்திய வரலாற்றில், இப்படிப்பட்ட ஓர் அநாகரிகமான ஆளுநரை, எந்த ஆளுநர் மாளிகையும் பார்த்தது இல்லை. ஐபிஎஸ் படித்து, பல்வேறு பயிற்சிகளைப் பெற்றுவந்தவர் இவ்வாறு நடந்துகொள்கிறார் என்றால், இவருக்கு எங்கிருந்து ஆணைகள் வருகின்றன?
ஆர்எஸ்எஸ் சிந்தாந்தத்தோடு வளர்ந்திருக்கும் ஆர்.என்.ரவி, காவல்துறை அதிகாரியாக பணியாற்றியபோது எப்படி செயல்பட்டிருப்பார்? மக்களை எவ்வாறெல்லாம் பழிவாங்கியிருப்பார் என்பதை அவரது நடவடிக்கை காட்டுகிறது. அவர் இந்துத்துவா அரசியலைப் பேசட்டும், இந்துத்துவா சிந்தாந்தத்தை தூக்கிப்பிடிக்கட்டும். ஆர்எஸ்எஸ்-ன் பிரச்சாரப் பீரங்கியாக இருக்கட்டும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவியேற்றுவிட்டு, அவர் இவற்றையெல்லாம் செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்று அவர் கூறினார்.