தமிழகம்

புதுச்சேரியில் ‘வாரிசு’ டிக்கெட் கிடைக்கவில்லை: எம்எல்ஏக்கள், அதிகாரிகள் மீது முதல்வரிடம் விஜய் ரசிகர்கள் புகார்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், அதிகாரிகள் அழுத்தத்தால் ‘வாரிசு’ படத்துக்கு டிக்கெட்டை தியேட்டர்கள் தர மறுப்பதால் சட்டப்பேரவைக்கு வந்து முதல்வர் ரங்கசாமியை விஜய் ரசிகர்கள் சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து, ஆட்சியரை அழைத்துப் பேசி கடந்த முறை போல் செயல்பட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை முன்பாக விஜய் நற்பணி இயக்கத்தினர் இன்று திரண்டனர். முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பத்து நிர்வாகிகளை முதல்வர் அறைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது தியேட்டர்களில் வாரிசு படத்துக்கு ரசிகர்களுக்கு டிக்கெட் தரவில்லை. முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்கள், அதிகாரிகள் டிக்கெட் வாங்கி சென்று விட்டதாக ரசிகர்களுக்கு தரவில்லை. இதனால் தியேட்டரில் போராட்டம் நடத்துவோம் என கூறினர்.

இதையடுத்து ஆட்சியர் வல்லவனை அழைத்து முதல்வர் ரங்கசாமி பேசினார். கடந்த முறை பீஸ்ட் படத்துக்கு தந்தது போல் இம்முறையும் டிக்கெட் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இதனிடையே, பேச்சுவார்த்தை தொடர்பாக ரசிகர்கள் கூறுகையில், "வாரிசு படத்துக்கு ரசிகர் ஷோ தருவதாக கூறி திரையரங்கு தரப்பில் இழுத்தடிக்கிறார்கள். அதிகாரிகள் பிரஷரால் டிக்கெட் தர மறுத்தனர். அத்துடன் தொகுதியிலுள்ள முன்னாள் எம்எல்ஏக்கள், தற்போதைய எம்எல்ஏக்கள் டிக்கெட் கேட்டுள்ளதால் ரசிகர்களுக்கு தரவில்லை. இதையடுத்து முதல்வரை சந்தித்தோம். பீஸ்ட் படத்துக்கு செய்தது போல் 50 சதவீத டிக்கெட் ரசிகர்களுக்கு தர சொல்லியுள்ளார். எம்எல்ஏக்களுக்கு டிக்கெட் வேண்டுமானால் எங்கள் இயக்கத்தில் சேர்ந்தால் தேவையான டிக்கெட்டுகளை புஸ்ஸி ஆனந்த் மூலம் தர தயாராக உள்ளோம்" என்று கூறினர்.

SCROLL FOR NEXT