சென்னை: சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிப்பது தொடர்பாக அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் இன்று சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தனர்.
எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க ஏற்கெனவே பழனிசாமி தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதன் மீது நடவடிக்கை எடுக்காததால், இன்று (ஜன.10) மீண்டும் பேரவைத் தலைவர் அப்பாவுவை சந்தித்து, எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிப்பது, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கையை மாற்றுவது குறித்து பேரவைத் தலைவர் உடனான சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பின்போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயகுமார் மற்றும் கே.செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், தங்கள் தரப்பு கோரிக்கையை நிறைவேற்றப்படவில்லை எனில், பேரவைத் தலைவருக்காக கோஷங்கள் எழுப்பி பேரவையில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் இபிஎஸ்-க்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுவுக்குப் பின்னர் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
மேலும், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக இபிஎஸ் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து இருதரப்பிலும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் குறித்து சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் கொடுத்திருந்தனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் நடந்த மழைக்காலக் கூட்டத்தொடரின்போது, ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்காத காரணத்தால், அந்த கூட்டத்தொடர் முழுவதையும் அதிமுகவினர் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஜன 10) மறைந்த எம்எல்ஏக்கள், மற்றும் பல்துறை பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.