பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு கிராமத்தில் சுகாதாரத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய்த் தடுப்பு பணியை நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார். 
தமிழகம்

வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் சிறுமி உயிரிழப்பு: பரமத்திவேலூர் அருகே நோய் தடுப்புப் பணி தீவிரம்

செய்திப்பிரிவு

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து, அங்கு நோய்த் தடுப்பு பணியில் சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார் (37). இவரது மகள் சிவதர்ஷினி (3). இவர் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து, அப்பகுதியில் சுகாதாரத் துறையினர் நோய்த் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இப்பணியை நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:

மோகனூர் வட்டாரத்துக்கு உட்பட்ட நன்செய் இடையாறு கிராமத்தில் சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனை செய்யப்பட்டதில், டெங்கு இல்லை எனத் தெரியவந்தது.

மேலும், வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இறந்தது தெரியவந்துள்ளது. எனவே, இப்பகுதியில் சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித் துறை மூலம் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இப்பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து காய்ச்சல் பாதிப்பு யாருக்கும் உள்ளதா என பரிசோதிக்கப்பட்டதில், 2 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் குறித்து அச்சம் அடைய வேண்டாம். தற்போது பருவநிலை மாற்றத்தினால் பல்வேறு இடங்களில் டெங்கு, மலேரியா போன்ற கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அல்லது மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க 15 வட்டாரங்களிலும் 318 கொசு ஒழிப்பு பணியாளர்களும், பேரூராட்சிப் பகுதிகளில் 190 பணியாளர்கள், நகராட்சிகளில் 295 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜெ.பிரபாகரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கலையரசு மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உடனிருந்தனர். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கநகராட்சி, பேரூராட்சி, 15 வட்டாரங்களிலும் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT