தமிழகம்

தமிழக பால் உற்பத்தியாளர் சங்கத்தினரின் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: பசும்பால் லிட்டருக்கு ரூ.42-ம், எருமைப்பால் லிட்டருக்கு ரூ.51-ம் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, தமிழக பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் சென்னையில் நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு உடனடியாக பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், ஆவின் நிர்வாகம் பால்பணப்பாக்கி சுமார் ரூ.500 கோடியைதைப்பொங்கலுக்குள் வழங்க வேண்டும்என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் சென்னை நந்தனத்தில் உள்ளஆவின் தலைமையகத்தின் முன்பாக நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பசும்பால் லிட்டருக்கு ரூ.42-ம், எருமைப்பால் லிட்டருக்கு ரூ.51-ம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். போராட்டத்துக்கு தமிழக பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.முகமது அலி தலைமை வகித்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளோம். பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படவில்லை என்றால் காத்திருப்பு போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று மதியத்துக்கு பிறகு, பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் முக்கியநிர்வாகிகளிடம் ஆவின் நிர்வாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிகாரிகளிடம் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கொடுத்தனர்.

விரைவில் நடவடிக்கை: ஆவின் நிர்வாகத்தின் பால் பணப்பாக்கி சுமார் ரூ.500 கோடியை விரைவில் வழங்கநடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சில கோரிக்கைகள் அரசின் கொள்கைமுடிவுடன் இருப்பதால், இந்த கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, காத்திருப்புப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தமிழக பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT