கோப்புப் படம் 
தமிழகம்

4 மாவட்டங்களுக்கு ஒரு டிஎஸ்பி: நிர்வாகத்தை எளிமைப்படுத்த மாநில உளவுத் துறை செயல்பாடு மாற்றியமைப்பு?

என். சன்னாசி

மதுரை: மாநில உளவுத்துறையின் செயல்பாடுகளை எளிமைப்படுத்தும் விதமாக 4 மாவட்டங்களுக்கு ஒரு டிஎஸ்பி என்ற அடிப்படையில் நிர்வாகம் மாற்றியமைக்கப்படுகிறது; இது விரைவில் செயல்பாட்டுக்கு வருகிறது என தமிழக உளவுத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு, பல்வேறு சட்டவிரோத செயல்களை முன்கூட்டியே தடுக்கும் வகையில், மாநகர காவல் துறையின் கீழ் நுண்ணறிவு பிரிவு (ஐ.எஸ்), மாவட்ட காவல் துறை நிர்வாகத்தின் கீழ் எஸ்பி- சிறப்புப் பிரிவு (எஸ்பி) செயல்படுகிறது. இந்த இரண்டு பிரிவினர் உள்ளூர் காவல் நிலைய எல்லைகளில் நடக்கும் பிரச்சினைகள் மற்றும் சட்டம், ஒழுங்கு, குற்றங்களை முன்கூட்டியே தடுக்கும் விதமாக பல்வேறு தகவல்களை திரட்டி, அதிகாரிகளிடம் தெரிவித்து, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உதவுவர்.

இவர்கள் தவிர, மாநில அளவில் முக்கிய தகவல்களை திரட்டுவது, சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுப்பது மற்றும் பல்வேறு அமைப்புகளின் செயல்பாடுகள், ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல், தலைவர்களின் வருகை குறித்த தகவல்களை சேகரித்து, மாநில உளவுத் துறை கூடுதல் டிஜிபி, ஐஜி, எஸ்பி போன்ற உயரதிகாரிகளுக்கு தினமும் தெரிவிக்கும் பணியில் மாநில உளவுத் துறையினர் (எஸ்பிசிஐடி) செயல்படுகின்றனர்.

இந்நிலையில், மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில், ஒரு உளவுத் துறை டிஎஸ்பியின் கீழ் காவல் ஆய்வாளர்கள், எஸ்ஐக்கள், காவலர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் செயல்படுகின்றனர். தற்போது, இந்த நடைமுறையை எளிமையாக்கப்படுகிறது.

இதன்படி, 3 அல்லது 4 மாவட்டங்களுக்கு ஒரு உளவுத்துறை டிஎஸ்பி என நிர்ணயம் செய்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இவரின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ஒரு ஆய்வாளர் மற்றும் எஸ்ஐக்கள், காவலர்கள் என சுமார் 20-க்கும் மேற்பட்டோர் பணியாற்றும் வகையிலான நடைமுறை கொண்டு வரப்படுகிறது என மாநில உளவுத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து உளவுத் துறை போலீஸ் தரப்பில் கூறுகையில், “பொதுவாக ஒரே உளவுத் துறை டிஎஸ்பி 8 அல்லது 10 மாவட்டங்களை கவனிக்கும் நிலை இருந்தது. ஒரே நேரத்தில் இருவேறு மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு போன்ற முக்கிய பிரச்னைகள் ஏற்பட்டால் அவற்றை ஒருங்கிணைத்து, மாநில உளவுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தல், அறிக்கை சமர்ப்பித்தலில் சில இடர்பாடு இருந்தது.

இதுபோன்ற சூழலில் தகவல் பெறுவதில் தாமதம், உறுதிப்படுத்துவதில் சில சிக்கல் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டும், நிர்வாகத்தை எளிமைப்படுத்தும் நோக்கிலும் 3 மற்றும் 4 மாவட்டங்களுக்கு என ஒரு டிஎஸ்பி என்ற அடிப்படையில் செயல்படும் நடைமுறை கொண்டு வரப்படுகிறது. இது நிர்வாக ரீதியாக தாமதமின்றி தகவல்களை திரட்டுவதிலும், சட்டம், ஒழுங்கு பராமரிப்புக்கும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம். இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றனர்.

SCROLL FOR NEXT