சென்னை: “தமிழகத்தில் விவசாயிகளை பாதுகாக்கும் பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் அரசு ஒருபோதும் அனுமதிக்காது” என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜன.9) உரையாற்றினார். அந்த உரையில் "முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ், இதுவரை பெறப்பட்டுள்ள 17.70 இலட்சம் மனுக்களில், 16.28 இலட்சத்திற்கும் மேலான மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. அயலகத் தமிழர்களின் நலனைக் காப்பதற்கு அயலகத் தமிழர் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 12-ஆம் நாள் ‘அயலகத் தமிழர் தினமாக’ இந்த அரசால் அறிவிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது.
இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் 174 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிசி, பால் பவுடர், உயிர்காக்கும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. வன்முறையில்லா ஒரு அமைதிப் பூங்காவாக தமிழ்நாடு தொடர்ந்து திகழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ‘நம்ம பகுதி நம்ம நியாய விலைக் கடை’ என்ற புதிய திட்டத்தின் கீழ், இதுவரை 4,455 பொது விநியோகக் கடைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் மட்டும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 232 தமிழ்நாட்டு மீனவர்கள், இந்த அரசின் தீவிர முயற்சியால் மீட்கப்பட்டுள்ளனர். இன்று வரை, பத்து மீனவர்கள் இலங்கை அரசால் திருப்பி அனுப்பப்படவில்லை. 106 மீன்பிடிப் படகுகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இன்னும் உள்ளன. இலங்கைக் கடற்படையினர் நமது மீனவர்களை கைது செய்வதைத் தடுக்கவும், மீனவர்களின் உடைமைகளை விடுவிக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.
அண்டை மாநிலங்களுடன் நட்புறவைப் பேணும் அதேவேளையில், மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளின் நீர்ப் பிரச்சினைகளில் நம் உரிமைகளைப் பாதுகாத்திட இந்த அரசு உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டின் உழவர் பெருமக்களைப் பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரத்திற்கு நீர் தேக்கப்பட்டுள்ளதோடு, அணையின் உயரத்தை மேலும் உயர்த்த அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. பெண்ணையாற்றில் இருந்து கர்நாடக மாநிலம் அனுமதியின்றி தண்ணீரை திசை திருப்பும் பிரச்சினையில், மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நதிநீர் தீர்ப்பாயத்தை விரைந்து அமைத்திட இந்த அரசு வலியுறுத்துகிறது.
மாநிலம் முழுவதும் நீர்ப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 1,334.10 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ஆறு பெருந்திட்டங்களை இந்த அரசு விரைந்து செயல்படுத்தி வருகிறது. இதன் பயனாக, 2.59 டி.எம்.சி அளவிற்கு கூடுதல் நீரைச் சேமிக்கவும் 6.92 டி.எம்.சி நீரை திரும்ப மீட்டெடுக்கவும் இயலும். அரசின் தொடர் கண்காணிப்பின் விளைவாக, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தாமிரபரணி - கருமேனியாறு – நம்பியாறு திட்டம் மற்றும் அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன" என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.