சென்னை: உலர் சாம்பல் விற்பனை செய்வதன் மூலம், மின்வாரியத்துக்கு மாதந்தோறும் சராசரியாக ரூ.14 கோடி வருமானம் கிடைத்து வருகிறது. தமிழ்நாடு மின்வாரியத்துக்கு வருவாயை விடச் செலவினம் கூடுதலாக உள்ளது. இதனால், மின்வாரியம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், நஷ்டத்தைக் குறைத்து வருவாயை ஈட்டும் நடவடிக்கையில் மின்வாரியம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதன்படி, அனல்மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் நிலக்கரி சாம்பலை விற்பனை செய்து வருவாய் ஈட்ட மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மின்வாரியத்துக்கு வடசென்னை நிலை 1, 2, மேட்டூரில் நிலை 1, 2 மற்றும் தூத்துக்குடியிலும் அனல் மின்நிலையங்கள் உள்ளன. இவை 4,320 மெகாவாட் மின்னுற்பத்தி திறன் கொண்டவை.
இங்கெல்லாம் மின்னுற்பத்திக்காக நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. நிலக்கரியை எரித்த பிறகு அவை உலர் சாம்பல் கழிவாக வெளியேற்றப்படுகிறது.
இந்த உலர் சாம்பலை 20 சதவீதம் செங்கல் உற்பத்தியாளர்களுக்கு இலவசமாகவும் மீதமுள்ள சாம்பலைத் தனியாருக்கு விற்பனையும் செய்யப்படுகிறது.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் சாம்பல் கழிவு மூலம், மின்வாரியத்துக்கு மாதந்தோறும் சராசரியாக ரூ.14 கோடி வருவாய் கிடைக்கிறது. மேட்டூர் ஆலையில் கடந்த 2021-22-ம் ஆண்டில் உலர் சாம்பலை விற்பனை செய்ததன் மூலம் ரூ.48 கோடி வருவாய் கிடைத்தது. இது அதற்கு முந்தைய 2020-21-ம் ஆண்டை விட ரூ.9 கோடி அதிகமாகும்.
மேட்டூர் மின்னுற்பத்தி ஆலை கடந்த 2021-22-ம் ஆண்டில் அதிகபட்சமாக 117 நாட்கள் இயக்கப்பட்டுள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகும். வரும் ஆண்டுகளில் உலர் சாம்பல் விற்பனைமூலம் மேலும் அதிக வருவாய் ஈட்டத் திட்டமிடப்பட்டுள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.