தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் ‘அகப்பை’ தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். படம்: ஆர்.வெங்கடேஷ் 
தமிழகம்

தஞ்சாவூர் | வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் பாரம்பரியமாக பொங்கல் பண்டிகைக்கு ‘அகப்பை’ தயாரிக்கும் தொழிலாளர்கள்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவின்போது, புதிதாக அறுவடை செய்யப்பட்ட புதுநெல்லை பச்சரிசி ஆக்கி, அதை மண்பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கு படைப்பர். அப்போது, மண்பானையில் உள்ள அரிசியைக் கிளற ‘அகப்பை’யை முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.

தேங்காய் கொட்டாங்குச்சியை சுத்தம் செய்து, அதில் இரண்டடி நீளத்தில் சீவப்பட்ட மூங்கிலை கைப்பிடியாக பொருத்தி அகப்பை தயாரித்து வந்தனர். இந்த ‘அகப்பை’யைப் பயன்படுத்தும்போது, அதன் மணமும் பொங்கல் சுவையும் அதிகமாகும். காலப்போக்கில் சில்வர், பித்தளை கரண்டிகளின் வரவால், அகப்பை காணாமல் போனது.

ஆனால், தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் மட்டும் பொங்கல் நாளில் இன்றளவும் அகப்பையை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக, அந்த கிராமத்தில் உள்ள தச்சுத் தொழிலாளர்கள் அகப்பை தயாரித்து, பொங்கலன்று காலையில் ஊர்மக்களிடம் வீடுதோறும் சென்று வழங்குவர். இந்த வழக்கமும் இன்றளவும் தொடர்கிறது.

இதுகுறித்து அகப்பை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மு.கணபதி கூறியது: எங்களது மூதாதையர் காலந்தொட்டு நாங்கள் தச்சுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இங்கு 15-க்கும் அதிகமான குடும்பத்தினர் அகப்பை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம்.

ஆண்டு முழுவதும் தேங்காய் கொட்டாங்குச்சியை சேகரித்து வைத்து, பொங்கல் நெருங்கும் போது நான்கைந்து நாட்கள் தண்ணீரில் ஊறவைத்து, உளியால் பக்குவமாக செதுக்குவோம். பின்னர், மூங்கில் மரத்தின் இரண்டடி துண்டுகளில் கைப்பிடி தயாரித்து, அகப்பை தயாரிப்போம்.

கவுரவிக்கும் ஊர் மக்கள்: இந்த அகப்பையை விலைக்கு விற்பனை செய்வதில்லை. பொங்கலன்று ஊர் மக்களுக்கு வீடு வீடாகச் சென்று வழங்குவோம். பின்னர், பொங்கலன்று பிற்பகலில் எந்தெந்த வீடுகளுக்கு அகப்பை கொடுத்தோமோ, அந்த வீடுகளில் இருந்து எங்களுக்கு ஒரு படி நெல் , தேங்காய், பழம்,வெற்றிலை, பாக்கு ஆகியவை தந்து கவுரவிப்பர். இந்தப்பாரம்பரியம் இன்றளவும் தொடர்வதால் நாங்கள் இந்தத் தொழிலை மகிழ்வுடன் செய்து வருகிறோம் என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT