தமிழகம்

புயல் பாதித்த பகுதிகளில் மத்திய குழு இன்று ஆய்வு: முதல்வர், தலைமைச் செயலாளருடன் ஆலோசனை

செய்திப்பிரிவு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் இன்றும் நாளையும் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.

வங்கக்கடலில் உருவான ‘வார்தா’ புயல் கடந்த 12-ம் தேதி சென்னை அருகே கரையைக் கடந்தது. அப்போது வீசிய சூறைக்காற்றால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 19-ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து புயல் பாதிப்புகளைச் சீரமைக்க, நிவாரணம் வழங்க ரூ.22,573 கோடி நிதி கோரினார். உடனடியாக ரூ.1,000 கோடி நிதி வழங்கவும், மத்திய குழுவினரை அனுப்பி தமிழகத்தில் ஆய்வு மேற் கொள்ளவும் கோரிக்கை விடுத்தார்.

இதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை இணைச் செயலாளர் பிரவீன் வசிஷ்டா தலைமையில், கே.மனோசரன் (புகையிலை துறை இயக்குநர்), ஆர்.பி.கவுல் (நிதித்துறை), கே.நாராயண் ரெட்டி (குடிநீர்த் துறை), ஆர்.ரோஷினி ஆர்தர் (சுகாதாரத் துறை), சுமீத்குமார் (மின் துறை) டி.எஸ்.அரவிந்த் (நெடுஞ்சாலைத் துறை), எஸ்.பி.திவாரி (ஊரக வளர்ச்சித் துறை), ஆர்.அழகேசன் (நீர்வளத்துறை) ஆகிய 9 மத்திய துறைகளின் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் நேற்று இரவு சென்னை வந்தனர்.

இன்று காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலகத்துக்கு வரும் மத்திய குழுவினர், 10 மணிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசுகின்றனர்.

தொடர்ந்து மாநில அதிகாரி களுடன் ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். காலை 11.30 மணிக்கு பனகல் பூங்கா, அண்ணா வளைவு, திருமங்கலத்தில் முறிந்த மரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை பார்வையிடுகின்றனர்.

அதன்பின், ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை பார்வையிடுகின்ற னர். தொடர்ந்து கிண்டி செல்லும் அவர்கள், மின் கட்டமைப்பு பாதிப்பு கள் தொடர்பான விளக்க காட்சி யுரையில் பங்கேற்கின்றனர். மாலை 5 மணிக்கு வண்டலூர் உயிரியல் பூங்கா சென்று அங்கு பாதிப்புகளைப் பார்வையிட்டு திரும்புகின்றனர். வழியில், பல்லாவரத்தில் காஞ்சி புரம் மாவட்டம் சார்பில் அமைக்கப் பட்டுள்ள புயல் பாதிப்பு புகைப்பட கண்காட்சியை பார்வையிடு கின்றனர்.

நாளை (29-ம் தேதி) காலை, ராயபுரத்தில் மீனவர்கள் கட்டமைப்பு பாதிப்புகளைப் பார்வையிடுகின் றனர். தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் கல்லுகடைமேடு, வெள்ளோடை, சின்னம்பேடு, சோத்துப்பெரும்பேடு, அருமந்தை, சீமாவரம், பெரிய முல்லைவாயல், வழுதிகைமேடு, மடியூர் ஆகிய பகுதி களில் பாதிக்கப்பட்ட வேளாண், தோட்டக்கலை பயிர்களைப் பார்வையிடுகின்றனர். மாலை 4.30 மணிக்கு தலைமைச் செயலகம் வரும் மத்திய குழுவினர், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனுடன் ஆலோசனை நடத்திய பின், டெல்லி புறப்பட்டுச் செல்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை, தமிழக வருவாய் நிர்வாக ஆணையரகம் செய்துள்ளது.

SCROLL FOR NEXT