பெரம்பலூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் நகரச் செயலாளராக இருந்தவர் தங்க.சண்முகசுந்தரம். இவர், பெரம்பலூர் நகராட்சி 8-வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு செப்.15-ம் தேதி 9-வது வார்டில் வசித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலாளர் இரா.கிட்டுவின் வீட்டுக்குள் தங்க.சண்முகசுந்தரம் அத்துமீறி நுழைந்து, அவரை தகாத வார்த்தையால் திட்டி, தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கட்சித் தலைமைக்கு புகார் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணையில் தங்க.சண்முகசுந்தரம் கட்சியின் விதிகளுக்கு எதிராகவும், கட்டுப்பாட்டை மீறியும் செயல்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தங்க.சண்முகசுந்தரத்தை கட்சியில் இருந்து 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்தும், இது குறித்து கட்சி தலைமையிடம் தங்க.சண்முகசுந்தரம் ஜன.20-ம் தேதிக்குப் பிறகு மேல்முறையீடு செய்யலாம் என்றும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு மாநிலச் செயலாளர் ஞான.தேவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.