ராஜபாளையம்: ராஜபாளையம் அன்னப்பராஜா பள்ளியில் யுனைடெட் கேனல் கிளப் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் நாட்டு இன நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.
இதில் தமிழக நாட்டு இன நாய்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை இனங்களும், பிற இந்திய நாட்டு இனங்களான ராம்பூர் கவுண்ட், கேரவன் கவுன்ட் முதல் கவுன்ட் உள்ளிட்ட 8 வகையான நாட்டு இன நாய்கள் பங்கேற்றன.
காலை 9 மணிக்கு துவங்கிய நாய்கள் கண்காட்சி மாலை 6 மணி வரை நடைபெற்றது. 300 நாய்கள் பங்கேற்ற கண்காட்சியில் வயது, உடல் அமைப்பு, உயரம், எடை, நாய்கள் ஓடும் வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் 10 சிறந்த நாய்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முதல் பரிசை சிவகாசி அருகே காக்கிவாடான்பட்டியைச் சேர்ந்த காளிராஜ் என்பவரது கன்னி இன நாய் வென்றது.
இதுகுறித்து கண்காட்சியை நடத்தும் யுனைடெட் கேனல் கிளப் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் டாக்டர் ரவி கூறுகையில், ‘இந்திய பாரம்பரிய நாட்டு இன நாய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ராஜபாளையத்தில் 6-வது ஆண்டாக நாய்கள் கண்காட்சி நடைபெறுகிறது. நாட்டு இன நாய்களை வளர்க்கும் ஆர்வத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதே கண்காட்சியின் நோக்கம், என்றார். ராஜபாளையத்தைச் சேர்ந்த கற்பகச் செல்வம் கண்காட்சியை ஒருங்கிணைத்தார்.